தரவுகளின்படி 75% க்கும் மேற்பட்ட இந்திய மக்கள் தங்களது மருத்துவ செலவுகளை அவர்களது சேமிப்பில் இருந்துதான் செய்கிறார்கள் என அறிய முடிகிறது. மருத்துவ காப்பீடு என்பது ஏதோ குறிப்பிட்ட மக்களுக்குத்தான் என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், யார் வேண்டுமானாலும் மருத்துவ காப்பீடு எடுக்க முடியும். மருத்துவ காப்பீடு எடுப்பதனால் பல நன்மைகள் இருப்பதாக சொல்கிறார்கள். அவற்றை இங்கே பார்க்கலாம்.
நிம்மதியான மருத்துவ சிகிச்சை : நமக்கோ அல்லது நமது குடும்ப உறுப்பினர்களுக்கோ விபத்தோ அல்லது திடீர் உடல்நலக்குறைபாடோ ஏற்பட்டுவிட்டால் முதலில் நமக்கு நிம்மதி இன்மை ஏற்படும். இதற்கு முக்கியக்காரணம், மருத்துவ சிகிச்சைக்கு செலவு செய்திட பணம் வேண்டும் என்பதனால் தான். இப்போதைய சூழலில், சிறு நோய்களுக்கே லட்சங்களில் செலவு செய்திட வேண்டி உள்ளது. ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைத்திருந்தால் பிரச்சனையே இல்லை. மருத்துவ சிகிச்சைக்கு ஆகிற செலவை இன்சூரன்ஸ் நிறுவனமே ஏற்கும் அல்லது நீங்கள் செலுத்திவிட்டு பிறகு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும்.
குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு : யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட சூழலில், மிகப்பெரிய விபத்தோ அல்லது நோய் பாதிப்போ குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்டால் அதற்கு சிறப்பான சிகிச்சை அளித்திட பெரும் தொகை தேவைப்படும். நாம் பொருளாதார பின்புலம் இல்லாதவராக இருந்தால் சிக்கல் தான். அந்த மாதிரியான சூழ்நிலைகளில் இன்சூரன்ஸ் எடுத்து வைத்திருந்தால் அது பலன் தரும்.
சேமிப்பை காக்கலாம் : நாம் பல்வேறு கனவுகளோடு தான் பணத்தை சேமித்து வைக்கிறோம். ஆனால், எதிர்பாராத விதமாக ஏற்படும் மருத்துவ செலவுகள் நம் ஒட்டுமொத்த சேமிப்பையும் தகர்த்துவிடும். அப்படி எதுவும் நேராமல் இருக்க ஹெல்த் இன்சூரன்ஸ் உதவும்.
மருத்துவமனையை கடந்தும் உதவும் பாலிசிகள் உண்டு : மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு மட்டும் பொருந்துகிற மருத்துவ காப்பீடுகள் உண்டு. அதேபோல, மருத்துவமனையில் பெரும் சிகிச்சை போக மருந்துகள் மாத்திரைகள் வாங்குவதற்கு ஆகக்கூடிய செலவுகளை ஏற்கும் இன்சூரன்ஸ் பாலிசிகளும் இருக்கின்றன.
வருமானவரி விலக்கு பெறலாம் : மருத்துவ காப்பீடு பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க மருத்துவ காப்பீட்டிற்கு செலுத்தும் தொகைக்கு Section 80D of the Income Tax Act, 1961 விதிப்படி வருமானவரி விலக்கு பெற முடியும்.